Search This Blog

Monday, March 19, 2012

இந்தியா ஆட்டம் காணுமோ?


இந்தியா ஒன்பது சதவிகித வளர்ச்சியை மீண்டும் பெறும் என்று பேசப்படுகிறது. மற்றொரு பக்கமோ விலைவாசி ஏற்றம், பணவீக்கம். காரணங்கள் என்ன? சமீபத்தில் தமிழ்நாடு அரசு பஸ் கட்டணத்தையும் ஆவின் பாலின் விலையையும் உயர்த்தியது. அதே நேரத்தில் மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்துவதற்கான வழிமுறைகளையும் தொடங்கியது.

இந்த உயர்வைக் கண்டித்து ஆளும் அரசியல் கட்சியைத் தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் அறிக்கை விட்டன. ஆனால் பொருளாதார நோக்கில் பார்க்கும் போது, இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது. கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் எல்லாப் பொருள்களின் விலையும் உயர்ந்துவிட்டன.  ஏன் இந்த விலை ஏற்றம்? அதிக பணப் புழக்கத்தினால் ஏற்படும் பண வீக்கம் என்று ஒரு முக்கிய காரணம் சொல்லப்படுகிறது.பணப் புழக்கம் ஏன் அதிகமாக இருக்கிறது என்பதை, பின்னால் சொல்கிறேன். இப்போது மறுபடியும் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு பிரச்னைக்கு வருவோம். பணப் புழக்கம் ஏன் அதிகமாக இருக்கிறது என்பதை, பின்னால் சொல்கிறேன். இப்போது மறுபடியும் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு பிரச்னைக்கு வருவோம். பேருந்துகள் மட்டும் அல்லாமல் பேருந்துகளின் உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்துவிட்டன. பெட்ரோல், டீஸல் விலை ஏறிவிட்டது. போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளமும் விலை உயர்வால் ஏற்றப்பட வேண்டிய தேவை. இந்த நிலையில் பஸ் கட்டணம் மட்டும் அப்படியே இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தால் போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்படும்.இதே நிலைதான் ஆவின் நிர்வாகத்துக்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கும். சமீபத்தில் அமெரிக்க நாட்டின் மிகப் பெரிய ஃபோட்டோ சாதனங்கள் தயாரிக்கும் கோடக் நிறுவனம் திவால் பெடிஷன் போட்டுவிட்டது. அதிக பணப்புழக்கத்தினால் ஏற்பட்ட பணவீக்கத்தினால்தான் விலைவாசி உயர்வு என்ற காரணம் சரியானதுதான். சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம்.


1947 ஆகஸ்ட் மாதம் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அப்போது பிரிக்கப்பட்ட இந்தியாவின் மக்கள்தொகை 30 கோடி. தற்போது, 120 கோடிக்கும் அதிகம். நான்கு மடங்கு கூடி இருக்கிறது. இதே காலகட்டத்தில் இந்தியாவின் பொருள்/தொழில் உற்பத்தி சுமார் 6 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்தத் தொழில் உற்பத்தியை விவசாய, தொழிற்சாலைகளின் உற்பத்தி, சேவைப் பொருள்களின் வளர்ச்சி என்று தனித்தனியாகக் கணக்கிடலாம்.இதில் விவசாயத்தின் உற்பத்தி சென்ற 64 வருடங்களில் சுமார் 2 மடங்குதான் உயர்ந்திருக்கிறது. 1948-ல் சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சரான ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் வழங்கிய முதல் மத்திய வரவு-செலவு பட்ஜெட்டில் அன்றைய மத்திய அரசின் மொத்த வரவு ரூபாய் 1000 கோடி சொச்சம். இன்றைய மத்திய பட்ஜெட்டின் மொத்த வரவு சுமார் 7 லட்சம் கோடி ரூபாய். 700 மடங்கு அதிகம். இதே காலகட்டத்தில் பணப் புழக்கத்தின் அளவைப் பார்ப்போம். வங்கிகளில் உள்ள வைப்புத் தொகை இதற்கு ஆதாரம். இன்றைய நிலைப்படி இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளிலும் உள்ள வைப்புத் தொகை ரூபாய் 60 லட்சம் கோடிக்கும் அதிகம். இதுவே சுதந்திரம் பெற்ற ஆண்டான 1947-ல் சுமார் ரூபாய் 12,000 கோடிதான். இதன்படி வங்கி வைப்புத் தொகை 64 ஆண்டுகளில் 500 மடங்கு அதிகரித்திருக்கிறது.மேற்கண்ட கணக்குப்படி 64 வருடங்களில் நாட்டின் மொத்த உற்பத்தி 6 மடங்கு தான் அதிகரித்திருக்கிறது. ஆனால் பணப் புழக்கம் 500 மடங்கும் அரசின் வருமானம் 700 மடங்கும் அதிகரித்திருக்கின்றன. இந்த அடிப்படையில் நாட்டின் மக்கள்தொகை அதிகரிப்பையும் (4 மடங்கு) கணக்கில் எடுத்துக் கொண்டால் சென்ற 64 வருடங்களில் விலைவாசிகள் சராசரியாக 300 மடங்கு உயர்ந்திருந்திருக்கின்றன.ஒரு சாதாரண பொருளாதார உண்மை என்னவெனில், எந்த அளவுக்கு உற்பத்தி அதிகமாகிறதோ, அதே அளவுக்கு பணப் புழக்கத்தின் அதிகரிப்பும் இருந்தால் விலைவாசி ஏறாது. ஆனால் இது நடைமுறையில் சாத்தியமில்லை. உற்பத்தி வளர்ச்சிகுறைந்து பணப்புழக்கம் அதிகமாகும் போது விலைவாசிகள் ஏறத்தான் செய்யும். அதிக உற்பத்தியில் பங்குபெற அதிக மக்கள் தொகை என்பதும் விலைவாசி ஏற்றத்துக்குக் காரணம். 


ஏன் பணப்புழக்கம் அதிகமாகிறது? தொழிலை விரிவுபடுத்த வேண்டுமென்றால் தொழிலதிபர்கள் வங்கிகளிடம் கடன் பெறுகிறார்கள். வங்கிகள் தங்களிடம் போதிய வைப்புத் தொகை இல்லை என்றால் ரிஸர்வ் வங்கியை அணுகுகிறார்கள். அரசும் இதற்கு விதிவிலக்கல்ல. மத்திய அரசு இதுவரை 11 ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது.இந்தத் திட்டங்களில் கடந்த 60 வருடங்களில் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் பணத்துக்கு அரசு எங்கே போகும்? வருஷா வருஷம் பட்ஜெட்டில் வரவை விட செலவுதான் அதிகமாகிக் கொண்டு வருகிறது. இதனால் வருமானப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதைச் சரிக்கட்டவும், திட்டங்களில் முதலீடு செய்யவும் அரசும் கடன் வாங்க வேண்டியிருக்கிறது. சமீபத்தில் வெளியான ஒரு புள்ளி விவரப்படி மத்திய அரசின் கடன் சுமை 34 லட்சம் கோடிக்கும் அதிகம். இதில் உள்நாட்டு கடன் மட்டும் சுமார் 30 லட்சம் கோடி. இந்த 30 லட்சம் கோடிக்கு ஆண்டொன்றுக்கு வட்டியாக மட்டும் அரசுக்கு ரூபாய் 2 லட்சம் கோடிக்கும் அதிகமாகச் செலவாகிறது. அரசின் வரவு செலவு கணக்கில் வருமானப் பற்றாக்குறைக்கு இந்த வட்டி ஒரு முக்கிய காரணம். சென்ற வருஷம் வருமானப் பற்றாக்குறை ரூபாய் 3 லட்சம் கோடிக்கும் அதிகம்.சாதாரணமாக பல லட்சம் கோடி ரூபாய்கள் முதலீடு செய்து பல தொழிற் நிறுவனங்கள், உற்பத்தி சாதனங்கள் என்று அமைக்கும்போது அதிலிருந்து அரசுக்கு வரி மூலமாகவோ மற்றபடியோ வருமானம் வர வேண்டும். ஆனால் உண்மை அப்படி இல்லை. போட்ட முதலுக்கு ஏற்ப அரசுக்கு வருமானம் இல்லை. ஒரு கணக்கு பார்ப்போம்.இந்த 11 ஐந்தாண்டுத் திட்டங்களில் அரசு சுமார் 50 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்திருக்கிறது. இந்த முதலீட்டிலிருந்து ஆண்டொன்றுக்கு 10 சதவிகிதமாவது வருமானம் வர வேண்டும். அதாவது சுமார் 5 லட்சம் கோடி ரூபாய். ஆனால், ஆண்டொன்றுக்கு ரூபாய் ஒரு லட்சம் கோடியாவது வருகிறதா என்பது சந்தேகம்தான்! இதை மனத்தில் வைத்துக்கொண்டு பார்த்தால் மத்திய அரசு தற்போதைய கடன் தொகை 34 லட்சம் கோடி ரூபாயை எப்படித் திரும்பச் செலுத்தப் போகிறது? ஒவ்வொரு வருஷமும் வாங்கும் புதிய கடன்கள் அரசின் கடன் சுமையை அதிகரிக்க அல்லவா செய்கிறது.

அதிக பணப் புழக்கத்துக்கு முக்கிய காரணம் உற்பத்தி அளவின் அதிகரிப்பை விட அதிக பணத்தை புழக்கத்தில் விடுவதுதான். மறுபடியும் மறுபடியும் கடன் வாங்கிக் கொண்டே போனால் ஒரு தருணத்தில் நாட்டின் பொருளாதாரச் சீரழிவு கட்டுக்கடங்காமல் போகும். (சமீபத்தில் கிரீஸ், சில வருடங்களுக்கு முன்பு பிரேஸில், அர்ஜெண்டினாவை உதாரணமாகச் சொல்லலாம்.)அதனால் மத்திய அரசு உடனே பொருளாதார நிபுணர்கள் அடங்கிய ஒரு வல்லுனர் குழுவை அமைத்து இதுவரை செயல்படுத்தப்பட்ட 11 ஐந்தாண்டுத் திட்டங்களின் பலனைப் பற்றி ஆராய்ந்து ஓர் அறிக்கை தரச் சொல்ல வேண்டும். அந்த அறிக்கையை ஒரு வருடத்துக்குள் கொடுக்க வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் எதிர்கால ஐந்தாண்டுத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.கடன் சுமையைக் குறைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிஸர்வ் வங்கியின் யோசனையையும் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் காணத் தொடங்கும். 

வி.கோபாலன்

No comments:

Post a Comment