Search This Blog

Thursday, March 22, 2012

சச்சின் -இரண்டாவது இன்னிங்ஸ்!

நாட்டின் அடுத்த ஒரு வருட நிதி நிலைமையைத் தீர்மானிக்கும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. புதிய வரி விதிப்புகள், எதிர்பார்த்த சலுகைகள் இல்லாமை, நடுத்தர வர்க்கத்துக்குச் சுமையை அதிகரிக்கச் செய்யும் பட்ஜெட் என்றெல்லாம் நிபுணர்கள் அலசி ஆராய்ந்துகொண்டு இருக்க... அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய சாமான்ய இந்தியன், சந்தோஷத்தில் மிதந்துகொண்டு இருந்தான். காரணம், அன்றைய தினம் சச்சின் நிகழ்த்திய 100-வது சதச் சாதனை!சச்சின் ஒவ்வொரு முறை தவறும்போதும், இந்திய அணியை ஜெயிக்கவைக்க முடியாமல் களத்தைவிட்டு வெளியேறும்போதும் அவரை மிக மோசமாக விமர்சிப்பது அதே ரசிகர்கள்தான்.  கடந்த ஓர் ஆண்டாகவே 100-வது சதத்தை அடிக்கத் தவறிய ஒவ்வொரு போட்டியிலும் அவரைத் திட்டிக் குவித்து விட்டார்கள் ரசிகர்கள். இத்தனைக்கும் சச்சினும் 100-வது சதத்துக்காக மெனக் கெடாமல் இல்லை. பேட்டின் எடை யைக் குறைத்தது முதல், பேட்டிங் ஸ்டைலை மாற்றியது வரை என்ன என்னவோ முயன்றுகொண்டே இருந்தார் சச்சின்.  

''இத்தனை வருட கிரிக்கெட் வாழ்வில் இவ்வளவு பெரிய பிரஷர் எனக்கு இருந்ததே இல்லை. அதில் இருந்து மீள யாராவது எனக்கு உதவ மாட்டார்களா என்று முதல்முறையாக ஒரு வழிகாட்டியைத் தேடத் துவங்கினேன். இப்போது சதம் அடித்துவிட்டேன். ஏதோ 50 கிலோ சுமையை இறக்கிவைத்ததுபோல இருக்கிறது'' என்ற சச்சினின் வார்த்தைகளே அவர் எவ்வளவு மன அழுத்தத்தில் கடந்த ஒரு வருடத்தைக் கழித்திருக்கிறார் என்பதைச் சொல்லும்.    இந்திய அணிக்காக அல்ல, தனது சொந்த சாதனைகள்தான் சச்சினுக்குச் சொந்தம் என்பது அவர் மீது உள்ள ஒரு குற்றச்சாட்டு. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றியை நெருங்கிக்கொண்டு இருந்தது. ஏழு ஓவர்கள் மீதம் இருந்த நிலையில், வெற்றிக்கு 14 ரன்களே தேவைப்பட்டது. அப்போது களத்தில் சச்சின் 90 ரன்களுடன் நின்றுஇருக்க, மறு முனையில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது 'தனது சதத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்’ என்று சச்சின் சொன்னதால், தினேஷ் கார்த்திக் சிக்ஸர், பவுண்டரிகளாகப் பறக்கவிட்டு இந்தியாவை வெற்றி பெறவைத்தார். நாட் அவுட்டாக வெளியேறிய சச்சினின் ஸ்கோர் 96.
 
கோடிகளைக் கொட்டிக் குவிக்கும் விளம்பரங்களில் நடிப்பதற்காகத்தான் இன்னமும் ஓய்வு எடுக்காமல் விளையாடிக் கொண்டே இருக்கிறார் என்பதும் அவர் மீதான விமர்சனங்களில் ஒன்று. சமீபத்தில் கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு பிராண்ட் அம்பா சிடர் ஆகும் ஒப்பந்தம் 20 கோடி ரூபாய் மதிப்பில் சச்சினிடம் வந்தது. 'மதுபானத் தயாரிப்புகளை நான் விளம்பரப்படுத்துவது இல்லை’ என உடனடியாக மறுத்தார் சச்சின்.2004-ல் ஆஸ்திரேலியாவில் ஒரு போட்டியில் சச்சினை சுழல் பந்து வீச்சாளர் பிராட் ஹாக் அவுட் ஆக்கிவிட்டார். போட்டி முடிந்ததும் சச்சினின் விக்கெட்டைப் பறித்த அந்தப் பந்தைக் கொண்டுவந்து அவரிடமே ஆட்டோகிராஃப் கேட்டு இருக்கிறார் பிராட் ஹாக். 'வாழ்த்துக்கள்... ஆனால், இது இன்னொரு முறை நடக்காது!’ என்று எழுதிக் கையெழுத்துப் போட்டார் சச்சின். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு 21 போட்டிகளில் ஹாக்கின் பந்துவீச்சை எதிர்கொண்டு இருக்கிறார் சச்சின். அதில் ஒரு முறைகூட ஹாக்கின் பந்து வீச்சில் அவுட் ஆனது இல்லை.மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவரும் ஒரு டி-ஷர்ட்டில் கையெழுத்திட்டு, அதை சச்சினுக்குப் பரிசாக அளித்தார்கள். அதில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இப்படி எழுதி இருந்தார்: 'நாங்கள் ஆக விரும்பும் மனிதர் சச்சின்!’.
 
100-வது சதத்துக்குப் பிறகான பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மீண்டும் ப்ரிஸ்க்கான, துறுதுறுப்பான சச்சினின் ஆட்டத்தைக் காண முடிந்தது.


சச்சினின் செகண்ட் இன்னிங்ஸ் இனிதான் ஆரம்பம்!

சார்லஸ்

விகடன்
 

1 comment:

  1. சச்சினின் செகண்ட் இன்னிங்ஸ் இனிதான் ஆரம்பம்! - உண்மை தான் !

    ReplyDelete