Search This Blog

Saturday, March 24, 2012

எனது இந்தியா! (விசுவாசத்தின் விலை! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

சாமான்யனின் வாழ்க்கையைச் சரித்திரம் புரட்டிப்​போட்டு​விடுகிறது என்பதைக் காலம் பல முறை நிரூபித்து இருக்கிறது. எந்த விதி ஒரு மனிதனை வெற்றியின் உச்சத்தை நோக்கிக் கொண்டுபோகிறது? எது மனிதனைக் குப்புறத் தள்ளிவிடுகிறது? இவை, எவராலும் பதில் கண்டுபிடிக்க முடியாத கேள்விகள்!  எத்தனையோ சாமான்ய மனிதர்களை அதிர்ஷ்டம் தனது கைகளால் அள்ளிக் கொண்டுபோய் உச்சத்தில்​வைத்து அழகு பார்த்திருக்கிறது. அதே அதிர்ஷ்டம், பாதியில் கைவிட்டுத் தலை குப்புறத் தள்ளியும் இருக்கிறது.அப்படி, அதிர்ஷ்டத்தின் விரலைப் பிடித்துக்​கொண்டு மேலே ஏறியவர்களில் முக்கியமானவர் விக்டோ​ரியா மகாராணியின் தனிச் சேவகராகப் பணியாற்றிய இந்தியரான முன்ஷி அப்துல் கரீம். இரண்டாவது நபர், 20 வருடங்களுக்குள் 54 முறை இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடற்பயணம் செய்த ஆயா அந்தோனி பெரா.


அப்துல் கரீமின் முழுப் பெயர் ஹாபீஸ் முகமது அப்துல் கரீம். ஜான்சியில் உள்ள லாலட்பூரில் 1863-ம் ஆண்டு ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். இவரது அப்பா ஹாஜி முகமது வாஜிருதீன், மருத்துவமனைப் பணியாளர். கரீமுக்கு நான்கு தங்கைகள், ஓர் அண்ணன். உருது மற்றும் பெர்ஷியன் மொழிகளைக் கற்றுத் தேர்ந்த அப்துல் கரீம், வேலை தேடி ஆப்கானிஸ்தானில் சில வருடங்கள் அலைந்தார்.1880-ல் அப்துல் கரீமின் அப்பா ஆக்ரா சிறைச்சாலையில் குமாஸ்தாவாக வேலை பார்த்துக்​கொண்டு இருந்தார். அப்பாவோடு சேர்ந்து, சிறைத்துறையின் கணக்கு வழக்கு​களைக் கவனிக்கத் தொடங்கினார் அப்துல் கரீம். சில ஆண்டுகளில் அவருக்கும் சிறைச்​சாலையிலேயே வேலை கிடைத்தது.ஆக்ரா சிறைச்சாலையில் கார்ப்பெட் தயாரிக்கும் வேலையில் கைதிகளை ஈடுபடுத்துவார்கள். அழகான கார்ப்பெட்டுகள் நெய்வதில் கைதிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அப்படித் தயாரிக்கப்பட்ட விசேஷ கார்ப்பெட்டுகள் ஏற்றுமதி செய்யப்படுவதும் உண்டு.1886-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த இந்தியப் பாரம்பரியக் கண்காட்சி ஒன்றில் கார்ப்பெட்டுகளைக் காட்சிக்கு வைப்பதற்கு 34 கைதிகள் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தப் பணியில், ஜெயிலர் ஜான் டெயிலருக்கு அதிக உதவிகள் செய்தார் அப்துல் கரீம். இங்கிலாந்தில் நடந்த இந்தக் கண்காட்சியை விக்டோரியா மகாராணி பார்வை​யிட்டுப் பாராட்டினார். அப்போது, இரண்டு தங்கக் காப்புகளை மகாராணிக்குப் பரிசாகத் தந்தார் ஜான் டெயிலர். வேலைப்பாடு மிகுந்த இந்திய நகைகளைப் பார்த்த மகாராணி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அதோடு, இந்தியாவில் இருந்து நம்பகமான இரண்டு பணியாளர்கள் தனக்குத் தேவைப்படுவதாகவும், அவர்கள் தனது சொந்த வேலைக்காரர்களாகத் தன்கூடவே இருக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட இருவரை அனுப்பிவைக்கும்படி, ஜெயிலருக்கு உத்தரவு பிறப்பித்தார்.


மகாராணிக்கு இந்த உதவி செய்வதன் மூலம் தனது பதவியை உயர்த்திக்கொள்ளலாம் என்று திட்டமிட்ட ஜான் டெயிலர், இந்தியா சென்றவுடன் அனுப்பிவைப்பதாக உறுதி அளித்தார். இந்தியா திரும்பிய சில வாரங்களில், இரண்டு பேரைத் தேர்வு செய்தார். ஒருவர் அப்துல் கரீம், மற்றவர் முகமது பக்ஷி.இருவருக்கும் ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்​பட்டது. அரண்மனையில் எப்படிப் பழக வேண்டும்? அங்குள்ள சம்பிரதாயங்கள் என்ன? உணவுப் பழக்கவழக்கங்கள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விசேஷப் பயிற்சி அளிக்கப்​பட்டது. மகாராணியிடம் வேலைக்குப் போவது சந்தோஷமாக இருந்தாலும், அப்துல் கரீமுக்கு சற்றுப் பயமும் இருந்தது. காரணம், அவர்கள் குடும்பத்தில் அது வரை யாரும் கடல் தாண்டி வேலைக்குப் போனது இல்லை. அதுபோல, இந்தியாவை ஆட்சி செய்யும் மேன்மை தாங்கிய மகாராணிக்கு வேலையாளாகப் போவது அவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ள விஷயம். ஆகவே, தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று, அப்துல் கரீம் முடிவு செய்தார்.இங்கிலாந்து கிளம்புவதற்குள் ஆங்கிலே​யரின் பழக்கவழக்கங்கள் குறித்து நன்றாக அறிந்து​கொண்டார். இருவரும் 1887-ல் ஆக்ராவில் இருந்து மும்பை வரை ரயிலில் பயணம் செய்து, அங்கே இருந்து கப்பலில் லண்டன் புறப்பட்டனர். ஜூன் மாதம் வின்ஸ்டர் கோட்டை அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தனர். மகாராணியிடம் நூற்றுக்​கணக்கான வேலையாட்கள் இருந்தனர். தனது அந்தரங்கப் பணிகளுக்கு விக்டோரியா ராணி இங்கிலாந்துவாசிகளையே பயன்படுத்தி வந்தார். முதன்முறையாக, அவரது தனி அலுவலகப் பணிகளுக்காக இரண்டு இந்தியர்கள் வேலைக்கு வந்திருப்பது அரண்மனையில் இருப்பவர்களுக்கே பெரும் ஆச்சர்யமாக இருந்தது.தங்கமும் வெள்ளியும் கொட்டிக்கிடக்கும் மாபெரும் அரண்மனையைக் கண்ட அப்துல் கரீமுக்கு, இங்குள்ள வசதிகளைக்கொண்டு, தான் ஒருநாள் பெரிய பணக்காரன் ஆக வேண்டும் என்று தோன்றியது. அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மிகப் பணிவாக, மகாராணிக்காக தான் கொண்டுவந்திருந்த தங்க நாணயத்துடன் அவரது தனி அறைக்கு சென்றார்.அதுவரை, ஓவியங்களிலேயே பார்த்திருந்த விக்​டோரியா மகாராணியை, நேரில் பார்த்தபோது மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தார். கணவனை இழந்த ராணிக்கு 60 வயதுக்கும் மேலாகி இருந்தது. பருத்த, குள்ளமான தோற்றத்தில் இருந்தார். சிடுசிடுப்பும் ஆத்திரமும்​கொண்டவர் என்று அறிந்திருந்த காரணத்தால், அவரை வணங்கி, தான் கொண்டுவந்திருந்த பரிசைக் கொடுத்து மிக மென்மையான குரலில் தன்னை அறிமுகம் செய்து​கொண்டார் அப்துல் கரீம். அவருக்குப் பிறகு, பக்ஷியும் அதேபோல் அறிமுகம் செய்துகொண்டார். இருவரும் தனது எடுபிடியாக எப்போதும் கூடவே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட மகாராணி, அவர்களுக்கான சம்பளம் மற்றும் உடைகள், தங்கும் இடம் ஆகியவற்றைப் பற்றி அறிவித்தார்.


அந்த நாளைப்பற்றி விக்டோரியா மகாராணி தனது நாட்குறிப்பில் 'இந்தியாவில் இருந்து இரண்டு பணி​யாட்கள் இன்று வந்து சேர்ந்தனர். இருவரும் எனது காலில் விழுந்து வணங்கி மிகவும் பயபக்தியோடு தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். அதில், அப்துல் கரீம் என்பவர் உயரமாகவும் திடகாத்திரமாகவும் இருந்தார். அவரது பேச்சில் மிகுந்த பணிவு இருந்தது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.முதல் பார்வையிலேயே விசுவாசமான வேலையாள் என்பது​போல தன்னைப் பற்றிய மனப் பதிவை உண்டாக்கிய அப்துல் கரீம், அதன் பிறகு விக்டோரியா மகாராணியின் எடுபிடி ஆளாக நாள் முழுவதும் கூடவே இருந்தார். பக்ஷியைவிட அப்துல் கரீமைத்தான் மகாராணிக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஆகவே, அவருக்கு ஆங்கிலத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்க மகாராணி உத்தரவு இட்டார். அதுபோல, அப்துல் கரீமிடம் இருந்து, தான் ஹிந்துஸ்தானி கற்றுக்கொள்ளப்போவதாக அறிவித்த மகாராணி, உடனே வகுப்பைத் தொடங்கினார். மகா​ராணியே தன்னிடம் பாடம் கற்றுக்கொள்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட அப்துல் கரீம், தனக்குச் சாதகமாகக் காய் நகர்த்தத் தொடங்கினார்.நாள் முழுவதும் வெறும் மேஜையாளாக எடுபிடி வேலைகள் செய்வது தனது தகுதிக்கு உரியதாக இல்லை. ஆகவே, தனக்கு ஏதாவது பொறுப்பான வேலை தர வேண்டும் என்று அவர் மகாராணியைக் கேட்டுக்கொண்டார். உடனே, மகாராணி அவருக்கு 'முன்ஷி’ என்ற பதவியை அளித்து அவரைத் தனது ஹிந்துஸ்தானி ஆசிரியர் என்று கௌரவித்தார். இது பக்ஷிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வந்த சில மாதங்களிலேயே மகாராணியோடு கரீம் நெருக்கமாகிவிட்டதைக் கண்டு, அவர் மீது பொய்ப் புகார் சுமத்த ஆரம்பித்தார். பக்ஷிக்குத் துணை செய்வது போல அரண்மனை ஊழியர்கள் சிலர் அப்துல் கரீமுக்கு எதிராக வேலை செய்யத் தொடங்கினர்.மகாராணி, அப்துல் கரீமை தனது சொந்த உதவியாளர் போல கூடவே வைத்துக்கொள்ள ஆரம்பித்தார். அதன் காரணமாக, அப்துல் கரீமுக்கு முன் ராணியின் அந்தரங்க வேலையாளாக இருந்த ஜான் பிரௌனுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த அறை, அப்துல் கரீமுக்கு வழங்கப்பட்டது.ஜான் பிரௌன், மகாராணியின் நெருக்கமான வேலையாளாக இருந்தவர். ராணியின் ரகசியக் காதலன் என்றெல்லாம்கூட அரண்மனையில் வதந்தி உலாவியது. திடீரென, ஜான் பிரௌன் இறந்து​போனதை மகாராணியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அந்த மனவெறுமையைப் போக்கும் விதமாக அப்துல் கரீம் செயல்படுவதாக அரண்மனை ஊழியர்கள் பேச ஆரம்பித்தனர்.

இரண்டு வருடங்களுக்குள், அரண்மனையின் முக்கிய ஊழியராக ஆகிவிட்டார் அப்துல் கரீம். பல மணி நேரம் மகாராணியோடு தனித்து உரையாடுவது, இசை கேட்பது, மகாராணி கலந்துகொள்ளும் நடன விருந்துகளுக்குப் போவது என்று, அவரும் அரச குடும்பத்து மனிதரைப் போலவே இருந்தார். அவருடைய செல்வாக்கு அதிகரித்தது. ஆக்ராவில் உள்ள ஜான் டெயிலருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும், தனது தந்தைக்கு மானியமும் விருதும் தர வேண்டும் என்று, நேரம் அறிந்து மகாராணியிடம் சொன்னார் அப்துல் கரீம். மகாராணி உடனே உத்தரவுகளைப் பிறப்பித்தார். ஆனாலும், அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை.1888-ல் நான்கு மாத விடுமுறையில் இந்தியாவுக்கு வந்த அப்துல் கரீம், இங்கே வசித்த தனது மனைவி மற்றும் உறவினர்களை அழைத்துக்கொண்டு லண்டன் கிளம்பினார். இந்தச் சந்தர்ப்பத்தில், ஜான் டெயிலர் பதவி உயர்வுக்கு யாரெல்லாம் தடையாக இருக்கிறார்கள் என்று அறிந்துகொண்டார். இங்கிலாந்து சென்றவுடன் அவர்களை எல்லாம் களை எடுக்க ஆரம்பித்தார்.  

விகடன்  

No comments:

Post a Comment