சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மாபெரும் மக்கள் இயக்கமாக பூதான் மற்றும்
சிப்கோ இயக்கம் இரண்டைக் குறிப்பிடுவேன். நிலத்தையும் இயற்கையையும்
மீட்பதற்காக நடந்த எழுச்சிமிக்க இரண்டு இயக்கங்களும் இந்திய வரலாற்றில்
தனித்துவம்கொண்டவை. உலக அளவிலும் இவை முன்னோடி இயக்கங்களாகவே இன்றும்
கொண்டாடப்படுகின்றன.ஐ.நா. சபையும், டைம், நியூயார்க்கர் இதழ்களும், லூயி ஃபிஷர், ஆர்தர்
கோஸ்லர் உள்ளிட்ட முக்கிய எழுத்தாளர்களும் இந்த மக்கள் இயக்கங்களைப்
பாராட்டி இவை காந்திய நெறிகளுக்கு கிடைத்த வெற்றி என கூறி இருக்கின்றனர்.பூமிதான இயக்கம் எனப்படும் பூதானை வழிநடத்தியவர் ஆச்சார்யா வினோபாவே.
மரங்களைக் காக்கும் சிப்கோ இயக்கத்தை முன்னின்று நடத்தியவர் சுந்தர்லால்
பகுகுணா. இருவருமே காந்தியவாதிகள். எளிமையானவர்கள். பல ஆயிரம் மைல்
தூரத்துக்கு நடந்தே சென்று தங்களது லட்சியத்தை அடைந்தவர்கள்.உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் உள்ள ரேனி என்ற
கிராமத்தில் உள்ள அரிய மரங்களை, 1974-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி வனத் துறை
கான்ட்ராக்டர்கள் வெட்டி விற்க முயன்றனர். இமயமலைச் சரிவில் உள்ள அந்த
மரங்களை வெட்ட விடாமல் தடுப்பதற்காக, இளம்பெண்கள் ஒன்றுசேர்ந்து மரங்களை
கட்டிப்பிடித்துக்கொண்டனர். தங்களைக் கொன்றுவிட்டு மரங்களை வெட்டிச்
செல்லுமாறு போராடியதே சிப்கோ இயக்கத்தின் தொடக்கப் புள்ளி.மரங்களை வெட்ட வந்தவர்கள், எவ்வளவோ முயன்றும் மரத்தைவிட்டு அந்தப்
பெண்களைப் பிரிக்கவே முடியவில்லை. முடிவில், மரங்களை வெட்ட முடியாமல்
வெறுங்கையுடன் திரும்பிச் சென்றனர். அறப் போராட்டமே வென்றது. மரங்களைக்
காப்பதற்காக தொடங்கப்பட்ட அந்தச் சுற்றுச்சூழல் இயக்கம்,மெள்ள வளர்ந்து
இமயமலை வட்டாரம் முழுவதும் பரவியது. சிப்கோ என்றால் கட்டிக்கொள்வது என்று
பொருள்.
சிப்கோ இயக்கத்தின் சிறப்பு, இதில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் பெண்கள்தான். வனத் துறை கான்ட்ராக்டர்கள் சாராயம் குடிப்பதற்காக ஆண்களுக்குப் பணத்தைத்
தந்துவிட்டு, தேவையான மரங்களை வெட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள். இது ஒரு
பக்கம் சுற்றுச்சூழலைக் கெடுக்கிறது. மறுபக்கம், குடிப் பழக்கம் ஒவ்வொரு
குடும்பத்தையும் சிதைக்கிறது. ஆகவே, இதற்கு எதிராகப் பெண்கள் திரண்டு
நடத்தியதுதான் சிப்கோ இயக்கம்.இயற்கையை வாழ்வாதாரமாகக்கொண்ட மக்களின் மகத்தான எழுச்சிப் போராட்டமாக
உருமாறியது. இந்தப் போராட்டத்துக்கு தலைமை ஏற்ற சுந்தர்லால் பகுகுணா, 5000
கிமீ தூரம் இமயமலைச் சமவெளியில் நடந்தே சென்று பிரசாரம் செய்து சிப்கோ
இயக்கத்தை வலுப்படுத்தினார். காடுகள் அழிக்கப்படுவதால் அதிகம்
பாதிக்கப்படுவது மலைவாழ் பெண்களே. ஆகவே, அந்தப் பெண்கள் தாங்களே முன்வந்து
போராட வேண்டும் என்றார் பகுகுணா. அதை உணர்ந்துகொண்ட மலைவாழ் பெண்கள்,
போராட்டக் களத்தில் குதித்தனர். ஒவ்வொரு மலைக் கிராமத்திலும் மரங்களைப்
பாதுகாக்க பெண்கள் படை அமைக்கப்பட்டது. இந்தப் பெண்களை, 'லேடி டார்ஜான்’
என்று பத்திரிகைகள் வர்ணித்தன. அந்த அளவுக்கு வீரம்கொண்ட இந்தப் பெண்கள்
படை, காட்டில் ஒரு மரத்தைக்கூட எவரையும் வெட்ட அனுமதிக்கவில்லை. அத்துடன்,
காட்டு வளத்தைப் பயன்படுத்தி தங்களின் வாழ்க்கையை எப்படிச் சுயமாக நடத்த
வேண்டும் என்றும் கிராமப்புறப் பெண்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களின்
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியது சிப்கோ இயக்கம். டேராடூன் பகுதியில் உள்ள டெகரி பகுதியில் சுரங்கம் தோண்டுவதை எதிர்த்து
இந்த இயக்கம் வலிமையாகப் போராடி, அந்தத் திட்டத்தை தடை செய்தது. அதுபோலவே,
பாகீரதி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயன்றபோது, சிப்கோ இயக்கம் அதை
எதிர்த்து தீவிரமாகப் போராடியது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற விழிப்பு
உணர்வை ஏற்படுத்திய முதல் இயக்கம் என்ற வகையிலும், மரங்களைக் கட்டி
அணைத்துக்கொண்டு வெட்டவிடாமல் காக்கும் சாத்வீகப் போராட்டத்தை
அறிமுகப்படுத்தியதும் சிப்கோ இயக்கத்தின் தனிச் சிறப்பு.மரங்களைக் காக்க நடந்த இந்தப் போராட்டம் போலவே, நிலத்தைப் பெறுவதற்காக
நடந்த இயக்கமே பூதான். அதாவது பூமி தானம். ஒரு சமுதாயத்தில் நிலம் எப்படிப்
பயன்படுத்தப்படுகிறது என்பதை வைத்தே அதன் எதிர்காலம் அமைகிறது. இன்று,
இந்தியா எங்கும் நிலம் முக்கிய வணிகப் பொருளாக ரியல் எஸ்டேட் சந்தையில்
விற்பனை ஆகிக்கொண்டு இருக்கிறது. நிலத்தை விலைக்கு வாங்குபவர்களில் ஐந்து
சதவீதம் பேர்கூட அதில் விவசாயம் செய்ய வாங்குவது இல்லை. நிலத்தில் முதலீடு
செய்வது அதிக லாபம் தரும் வியாபாரமாகவே கருதப்படுகிறது. எளிய வழி என்பதால்
விவசாய நிலங்கள்கூட பிளாட்டுகளாக உருமாற்றப்பட்டு, பரபரப்பாக விற்பனை
ஆகின்றன,நில மோசடி, நில அபகரிப்பு என்று சம காலத்தின் முக்கிய பிரச்னைகள் யாவும் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் ஏற்படும் சிக்கல்களே.நிலம் சார்ந்து உலகெங்கும் எவ்வளவு பிரச்னைகள் உருவாகி இருக்கின்றன என்பதை
ஷ§மாஸர் மிக அழகாக சுட்டிக்காட்டுகிறார். இவர் எழுதிய 'சிறியதே அழகு’ என்ற
புத்தகம் உலகின் சிறந்த 100 புத்தகங்களில் ஒன்று. ஷ§மாஸரின் கருதுகோள்கள்
காந்தியச் சிந்தனையும் பௌத்தப் பொருளாதாரக் கோட்பாடும் ஒன்றிணைந்தது.
விவசாயிகளிடம் இருந்த நிலம் பறிக்கப்பட்டு, அது வணிகப் பொருளாக
ஆக்கப்படுவது மானுட குலத்தின் சீரழிவுக்கான அடையாளம் என்கிறார் ஷ§மாஸர்.
விவசாயம் என்பது வாரத்தில் ஐந்து நாட்கள் பார்க்கும் அலுவலக வேலை கிடையாது.
மற்ற உத்தியோகத்தைப் போல, ஒரு விவசாயி வாரத்துக்கு இரண்டு நாட்கள்
விடுமுறை எடுத்துக்கொள்ள முடியாது. அது, ஓய்வு இல்லாத உழைப்பு. வாரம் முழுக்க வேலை செய்யும் விவசாயி
குறைவாகச் சம்பாதிப்பதும், வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகம் செல்பவர்கள்
அதிகம் சம்பாதிப்பதுமான முரண் எப்படி உருவானது எனக் கேள்வி கேட்கிறார்
ஷ§மாஸர்.வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பால் தரும் பசு கண்டுபிடிக்கப்படாத வரை
நகரவாசிகள் விவசாயிகளின் உழைப்பை உணர்ந்தே தீர வேண்டும் என்பதே அவரது
வாதம்.நிலத்தை நிர்வகிப்பதும் பராமரிப்பதும் மனிதன் நூற்றாண்டு காலமாகத்
தொடர்ந்து வரும் பெரும் பணி. அதை இன்றைய மனிதன் கைவிடும்போது, மிகப் பெரிய
சூழல் சார்ந்த பிரச்னையையும் பொருளாதாரச் சீரழிவையும் சந்திக்க நேரிடும்.
ஆகவே, நிலத்தைக் காப்பதும் மேம்படுத்துவதும், அதன் வழி உற்பத்தியைப்
பெருக்குவதும் நாம் மேற்கொள்ள வேண்டிய உடனடி வேலை என்கிறார் ஷ§மாஸர்.இந்த எண்ணத்தின் ஆணிவேர்தான் பூமி தான இயக்கம் எனப்படும் பூதான். நிலமற்ற
ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு, அதிக நிலம் வைத்திருக்கும் நிலப்
பிரபுக்களிடம் இருந்து நிலத்தைத் தானமாகப் பெற்று, பகிர்ந்து அளிப்பதுதான்
பூமி தான இயக்கம். அது எப்படி சாத்தியம்? யார் தனது நிலத்தைத் தானமாக
கொடுப்பார்கள்? என்று இன்றுள்ள மனநிலை உடனே கேள்வி எழுப்பும். அன்றும்
அப்படியான கேலியும் கிண்டலும் எழுந்தன. ஆனால், இந்தியா முழுவதும் 20
ஆண்டுகள்... 30 ஆயிரம் மைல்களுக்கும் மேலான தூரத்துக்கு நடந்து, 40 லட்சம்
ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்றிருக்கிறார் வினோபாவே. ஒரு துண்டு நிலத்தைக்கூட அடுத்தவருக்காக மனம் உவந்து தர முன்வராத
நிலப்பிரபுக்களின் மனதை மாற்றி 40 லட்சம் ஏக்கர் நிலத்தைப் பெற
முடிந்திருப்பது வினோபாவின் காந்திய நெறிக்குக் கிடைத்த வெற்றி. கணவன்
கேட்டாலே தன் நகைகளைக் கழற்றித் தர பெண்கள் யோசிப்பார்கள். ஆனால், காந்திஜி
கேட்டவுடன் காதில் கழுத்தில் அணிந்திருந்த அத்தனை நகைகளையும், தேசச்
சேவைக்காக பெண்கள் தர முன்வந்தது மகாத்மா மீதான மீதான நம்பிக்கை. அந்த
நம்பிக்கைதான் பூமி தான இயக்கத்திலும் நடந்தேறியது என்கிறார் வினோபாவே.
விகடன்
No comments:
Post a Comment