ஒரு வருட தவத்துக்குப் பிறகு, 100வது செஞ்சுரியை அடித்துப் பெரிய பாரத்தைக்
கீழிறக்கியிருக்கிறார் சச்சின். பிராட்மேனின் டெஸ்ட் ஆவரேஜ் சாதனையை
(99.94) எப்படி ஒரு
கிரிக்கெட் வீரரால் கனவில் கூட நினைக்க முடியாதோ, அதே போல சச்சினின் இந்தச்
சாதனையை மிஞ்ச உண்மையிலேயே வானத்திலிருந்து யாராவது குதித்து வந்தால்தான்
உண்டு.சச்சினுக்கும் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் உண்டு. சில உதாரணங்கள். சச்சின்
ஆடிய முதல் ஒருநாள் தொடரில் அவரை ஆட வைப்பதாகவே இல்லை. பாகிஸ்தானுக்கு
எதிரான முதல் ஒரு நாள் ஆட்டம் ரத்தானதால் கண்காட்சி ஆட்டம் நடத்தப்பட்டு,
அதில் சச்சின் சேர்க்கப்பட்டார். அப்துல் காதிர் பந்தில் தொடர்ந்து மூன்று
சிக்ஸர்
அடித்து கவனத்தை ஈர்த்தார் சச்சின். உடனே, அடுத்த ஒருநாள் ஆட்டத்தில்
சச்சினுக்கு இடம் கிடைத்தது. ஆனால், ஒரு ரன்னும் அடிக்கவில்லை. இதனால்,
அந்தத்
தொடரில், அடுத்தடுத்த மேட்சுகளில் ஆட அனுமதிக்கப்படவில்லை.நியூசிலாந்துக்கு எதிராக ஆடிய இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் பூஜ்ஜியம்.
நூறு செஞ்சுரிகள் அடித்தவரின் தொடக்கம் எப்படி என்று பாருங்கள். இன்று,
கோலி
மேட்சுக்கு மேட்ச் செஞ்சுரிகள் அடிக்கிறார். ஆனால், ஒருநாள் ஆட்டத்தில்,
சச்சினுக்கு முதல் செஞ்சுரி அடிக்க 78 ஆட்டங்கள் தேவைப்பட்டன. அப்படியாவது
நிம்மதியாக
சுவாசிக்க முடிந்ததா? அடுத்த மூன்று மேட்சுகளிலும் பூஜ்ஜியம்தான்
அடித்தார். 99 செஞ்சுரிகளை கடகடவென அடித்துவிட்டு நூறாவது செஞ்சுரிக்கு ஒரு
வருடமாகத்
தவித்தாரே, எவ்வளவு வேதனையான காலமது.
முக்கியமான போட்டிகளில் தலைசிறந்த ஆட்டங்களை முன்வைத்திருக்கிறார். சச்சின்
சோடைபோன உலகக்கோப்பை என்று ஒன்று இல்லை. ரசிகர்கள் மிகவும்
எதிர்பார்க்கும்
ஆஸ்திரேலியா, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் தனித் தன்மையுடன்
ஆடியிருக்கிறார். 22 ஆண்டு காலம் எந்தச் சவால்களுக்கும் பொருந்திய ஓர் உடல்
தகுதியைக்
கொண்டதால்தான் சச்சினால் தொடர்ந்து ஆடவும் சராசரியாக ஆறு மேட்சுகளுக்கு
ஒருமுறை செஞ்சுரி அடிக்கவும் முடிந்திருக்கிறது. ஒருநாள் போட்டி க்ஷயில்
சாதித்துவிட்டு
டெஸ்ட்டிலும் திறமையை நிரூபிக்கும் நவீன கிரிக்கெட்டர்களுக்கு மத்தியில்,
முதலில் டெஸ்ட்டில் சாதித்துவிட்டு, பிறகு ஒருநாள் கிரிக்கெட்டை ஒரு கை
பார்த்தவர்
சச்சின். சச்சினின் ஆரம்பக் காலத்தில் அவருக்குக் கடும் சவால்களைத் தந்த
மஞ்ரேக்கர், காம்பிளி, டபிள்யூவி ராமன் போன்றோரைப் பின்னுக்குத் தள்ளினார்.
அடுத்து அசார்,
சித்து போன ஜாம்பவான்களையும் முந்திக் கொண்டு கங்குலி, திராவிட், ஷேவாக்
என்று புதிதாகப் புறப்பட்ட இளம்புயல்களையும் அடுத்தடுத்து சமாளித்து ஒரு
தன்னிகரற்ற வீரராக விளங்குபவர் சச்சின். இரண்டு தலை முறைகள் கடந்து
மூன்றாம் தலை முறையுடனும் ஈடுகொடுத்து ஆடுவது லேசுபட்ட விஷயமல்ல.
சமீபத்தில்,
ஓய்வு பற்றிய பேச்சு எழுந்த நேரத்தில்தான் அவர் இரட்டைச் சதம் அடித்தார். பலமுறை காயங்களில் மாட்டிக் கொண்டாலும், ஒவ்வொருமுறையும் கவனமாக
அதிலிருந்து மீண்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம் தராமல் இருந்திருக்கிறார்.
பள்ளிக்
காலங்களிலேயே பெயரையும், புகழையும் பார்த்துவிட்டதாலோ என்னவோ, பிறகு வந்த
நட்சத்திர அந்தஸ்து சச்சினைத் துளியும் பாதிக்கவில்லை. கேர்ள் ஃப்ரெண்டுடன்
சுற்றினார், பார்ட்டிகளில் ஈடுபடுகிறார் என்பன போன்ற
சர்ச்சைகளுக்கெல்லாம் சச்சினின் வாழ்க்கையில் இடமேயில்லை. சத்தமேயில்லாமல்
காதல் திருமணம் செய்து கொண்டு, கிரிக்கெட்டில் தீவிர அக்கறை செலுத்தினார்.
சச்சின் நாட்டுக்காக ஆடுவார் என்று முதலில் சொன்னவர் சச்சினின்
பயிற்சியாளரான அச்ரேகரோ, சச்சினை ரஞ்சிப் போட்டிக்குத் தேர்வு செய்த
வெங்சர்
காரோ, இந்திய அணிக்குள் நுழைத்த ராஜ் சிங் துங்கர்புரோ கிடையாது.
பள்ளிகளுக் கிடையேயான போட்டி ஒன்றில், கோந்த லேகர் என்கிற ஒரு அம்பயர்,
‘இந்தப் பையன் வருங்காலத்தில் இந்தியாவுக்காக ஆடுவான்’ என்று மீசைகூட
முளைக்காத சச்சினைக் காண்பித்து அச்ரேகரிடம் ஆரூடம் சொல்லியிருக்கிறார்.
அன்று, அச்சின்னஞ் சிறுவனுக்கிருந்த துடிப்பும், வேகமும், ரன்கள்
அடித்தால் உண்டாகிற குதூகலமும் இத்தனை வருடங்களாகியும் சச்சினிடமிருந்து
விலகாமல்
இருக்கிறது. அந்த உற்சாகம்தான் இன்னமும் சச்சினை மேலும் மேலும் பல
சாதனைகள் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment