Search This Blog

Tuesday, March 13, 2012

விராட் கோலி - அடுத்த தலைவன்!


தோனியின் தலை மேல் கூர்மையான கத்தி. துணைத்தலைவர் பதவிக்கு ஷேவாக், கம்பீர், ரைனா போன்றோர் நியமிக்கப்பட்டபோது தோனிக்கு இவர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்துவார்கள் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால், விராட் கோலியைத் துணைத்தலைவர் பதவிக்கு உயர்த்தியன் மூலமாக இந்திய கிரிக்கெட் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.ஒரு வருடம் பின்னே சென்று பார்த்தால், நடந்ததெல்லாம் நம்ப முடியாதவையாகவே இருக்கின்றன. உலகக் கோப்பையை வென்ற அடுத்த சில வாரங்களில் ஐ.பி.எல். கோப்பையையும் இரண்டாவது முறையாகக் கைப்பற்றியபோது தோனியைப் பார்த்து கிரிக்கெட் உலகம் உண்மையிலேயே மிரண்டுதான் போனது. தோனி, தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றுகூட தலையைக் காப்பாற்றிக் கொண்டு வந்ததால் (டெஸ்ட் தொடரில் 1-1) அழிக்க முடியாத சக்தியாக விளங்கினார். அடுத்ததாக, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தையும் சமாளித்துவிட்டால் தோனிக்கு நிகரான ஒரு கேப்டன் இனியில்லை என்கிற நிலை உருவானது.

ஆனால், அந்த இடத்தில்தான் பெரிய திருப்பமும் சறுக்கல்களும் ஏற்பட்டன. பெரிய கனவோடு வந்த இந்திய அணியைக் குனிய குனிய அடித்தது இங்கிலாந்து. டெஸ்ட், ஒரு நாள் போட்டி இரண்டிலும் தோனியால் ஒரு சிறு வெற்றியைக்கூடப் பெற முடியவில்லை. முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள், தோனியின் போதாத நேரம் போன்றவற்றால் தோல்வி என்றுகூட சமாதானம் சோல்லப்பட்டது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகக் கவனமாக அணுகப்பட்டது. கூடுதலாக ஒரு பயிற்சி ஆட்டம் நுழைக்கப்பட்டது. காயமடைந்த வீரர்களுக்குத் தேர்வுகள் எல்லாம் வைக்கப்பட்டன. ஆனால், மீண்டும் தோனியை சிறுஎறும்பாக எண்ணவைத்தது ஆஸ்திரேலியா.டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் படுகேவலமாகத் தோல்வி கண்டது இந்தியா. தொடர்ந்து முக்கியமான 8 டெஸ்டுகளில் தோல்வி அடைந்தபோதும் இந்திய அணியில் எந்தவொரு மாற்றத்தையும் தோனியால் கொண்டுவர முடியவில்லை. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் தொடரில் தோனி சிறப்பாக ஆடியபோதும் அணியை அவரால் மீட்டெடுக்க முடியவில்லை. ஒரு கேப்டனாக தோனியின் உபயோகம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், கோலிக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி பல தீர்மானங்களை முன்வைக்கிறது.கோலி, ஒரு பேட்ஸ்மேனாக, சச்சினின் சாதனைகளுக்கு ஈடுகொடுக்கக் கூடியவராக இருக்கிறார். தனக்கு முன்னால் ஆடவந்த ரைனா, ரோஹித் சர்மாவை கடந்து சென்றுவிட்டார். டிசம்பர் 2006ல், கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி மேட்சின் இரண்டாம் நாளின் முடிவில் கோலி அவுட் ஆகாமல் இருந்தார். கடினமான சூழ்நிலையில் அணியை மீட்டெடுக்க வேண்டிய சூழ்நிலை அப்போது. அடுத்த நாள் அதிகாலையில், கோலியின் தந்தை இறந்துபோன தகவல் கிடைத்தது. அணியின் வீரர்கள் கோலிக்கு ஆறுதல் சொல்ல வந்தபோது, கோலி சோன்னார், ‘நான் ஆடப் போகிறேன்’. அணி வீரர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். ஒரு மகனாக அவர் செய்ய வேண்டிய கடமைகள் எவ்வளவோ இருக்கும். ஆனால், அணிக்காக மைதானத்தில் இறங்கி, 90 ரன்கள் அடித்து அணியை மீட்டெடுத்து, பிறகுதான் தந்தைக்கான இறுதிக் கடமைகளை முடிக்கச் சென்றார். இந்தத் தீவிரத்தன்மைதான் கோலியை இந்திய அணியின் அடுத்த தலைவனாக உயர்த்தியிருக்கிறது.


ஆசிய கோப்பைக்கு தோனிதான் கேப்டன். சச்சினும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஷேவாக்குக்கு ஓய்வு மட்டுமே, நீக்கமல்ல என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இத்தனை தோல்விகளுக்குப் பிறகும் ஒருவருக்குக்கூட பெரிய பாதிப்பில்லை (காரணம் - ஐ.பி.எல்.). அடுத்ததாக, இலங்கை சுற்றுப்பயணம் இருக்கிறது. 2013வரை அமிலச் சோதனை எதுவும் கிடையாது. அந்த வருடம்தான் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்கிறது. இந்த நிலையில் தோனியையும் கோலியையும் வாரியம் எப்படி கையாளப் போகிறது?  டெஸ்டில் இனியும் தோனிக்கு இடமில்லை என்று வாரியம் முடிவெடுக்க வேண்டும். பேட்டிங்கும் மோசம், கீப்பிங்கும் சுமார் என்பதால் டெஸ்ட் மேட்சுகளுக்கு தோனி தேவையா என்கிற கேள்வி எழுகிறது. தோனியை விடவும் சஹா கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். கீப்பிங்கும் நன்றாகவே செகிறார். இந்த நிலையில் தோனிக்காக ஓர் இளைஞனின் எதிர்காலத்தை வீணாக்கலாமா? தோனிக்குப் பதிலாக (குறுகிய காலத்துக்கு) ஷேவாக் அல்லது கம்பீர் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படவேண்டும். அதுவரை கோலியை தயார்படுத்த வேண்டும். ஒரு வருடம் கழித்து, கோலி, டெஸ்ட் அணிக்குத் தலைமை தாங்க வேண்டும். (ஏற்கெனவே 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்குத் தலைமை தாங்கி உலகக் கோப்பையை வாங்கியிருக்கிறார் கோலி. மேலும்,ஐ.பி.எல்., ரஞ்சி அணிகளுக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.) எப்படி 2015 உலகக் கோப்பைக்கு இப்போதிருந்தே இந்திய அணி தயாராகிறதோ, அதுபோல 2013 தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்துக்கும் ஒரு திட்டம் வேண்டும். ஆஸ்திரேலியத் தேர்வுக்குழு போல வெளிப்படையாகவும் தொலைநோக்குப் பார்வையுடன் இருந்தால் மட்டுமே இந்திய அணியைச் சரிவிலிருந்து மீட்க முடியும்.

தாம், வீணாக்கப்படுகிறோம் என்று கோலி எண்ணுவதற்கு முன்பே முறையான பதவிகள் வழங்கப்பட வேண்டும். கோலிதான் இந்திய அணியின் நம்பிக்கையான எதிர்காலம்.

- ச.ந.கண்ணன்

No comments:

Post a Comment