Search This Blog

Wednesday, March 14, 2012

எனது இந்தியா! ( ஆதிச்சநல்லூரில் பழைய நகரம்! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


அவரது கருத்துப்படி, தமிழ் மக்கள் கொங்கராயக்குறிச்சி என்ற ஊரில் பண்பாட்டுச் செறிவுடன் வாழ்ந்து இருக்கிறார்கள், அந்த ஊரில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம் ஒன்று இருப்பதாகவும் தெரிவிக்கிறார். அங்குள்ள விநாயகர் கோயிலில் கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இரண்டு காணப்படுவதாகவும், அந்தக் கல்வெட்டுக்களின் மூலம், கொங்கராயக்குறிச்சியின் பழம்பெயர் 'முதுகோனூர்’ என்பதும், கல்வெட்டுக்கள் 'முன்றுறை வீரர் ஜினாலயம்' என்ற சமணப் பள்ளிக்கு உரியவை என்றும் தெரியவந்து இருக்கிறது.ஆதிச்சநல்லூரில் கண்டறியப்பட்ட மண் பாண்டங்களில் பிராமி எழுத்து வடிவம் காணப்படுகிறது. இதுபற்றி குறிப்பிடும் ராமச்சந்திரன், எழுத்துருக்கள் மற்றும் பல்வேறு உலோகப் பொருட்களை உருவாக்கியவர்கள் ஆசாரி மரபினராகவே இருந்திருக்க வேண்டும் என்கிறார். எழுத்து என்ற சொல் தொடக்​கத்தில் ஓவியத்தையே குறித்தது. ஓவிய எழுத்துகளில் இருந்தே ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என்ற அகர ஆதி எழுத்துக்கள் உருவாயின. எனவே, ஓவியச் செந்நூல் உருவாக்கிய விஸ்வகர்ம சமூகத்தவரே, எழுத்துகளை வடிவமைத்து இருக்க வேண்டும்.'கண்ணுள் வினைஞர்’ எனச் சங்க இலக்கி​யங்கள் இவர்களைக் குறிப்பிடும் சொல்​லாட்​சியையும், எழுத்தைக் குறிப்பதற்கு வடமொழியில் வழங்குகிற 'அக்ஷரம்’ என்ற சொல்லையும் ஒப்பிட்டால்... இந்த உண்மை புலப்படும் என்பதே அவரது வாதம்.வேள்விச் சடங்குகளைப் புறக்​கணித்த வைதிக சமயத்தவரை, விராத்யர் என்பார்கள். இரும்பு யுகத்தை அறிமுகப்படுத்திய பெருங்கற்படைப் பண்பாடு என்பதே விராத்யர்களுடைய பண்பாடுதான் என்பது அறிஞர் அஸ்கோ பர்போலாவின் கருத்து.ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழி​​களில், மண்வெட்டி, கொழு, நெல், உமி, பஞ்சாடை போன்றவை கிடைத்​துள்ளன. ஆகவே, ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி ஆற்றின் கரையில் நெல், பருத்தி போன்றவற்றை விவசாயம் செய்ததுடன், நெசவுத்தொழிலும் செய்து இருக்கின்றனர் என்று அறிய முடிகிறது.


ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில், இந்திய அரசு தொல்லியல் துறையின் அறிஞர் சத்தியமூர்த்தி 2004-ம் ஆண்டு நடத்திய ஆய்வே முக்கியமானது. அதில், பல்வேறு எலும்புக்கூடுகள், உடையாத மண் பாண்டங்கள், பல்வேறு வடிவக் கிண்ணங்கள், பானைகள், குடுவைகள், ஜாடிகள், கழுத்து மாலைகள், மணிகள், மாவரைக்கும் கல், கழுத்தணிகள், காப்புகள், வளையல்கள், மோதிரங்கள் என நிறைய சான்றுகள் கிடைத்து உள்ளன.தொன்மையான நாகரிகத்தை உடைய ஒரு பிரதேசம் தமிழ்நாடு என்பது, பல்வேறு வகைப்பட்ட ஆய்வுகள் மூலம் ஏற்கெனவே நிரூபணம் ஆகியுள்ளது. இதை உறுதி செய்வது போல ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள தடயங்கள், 3,000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் பண்பாட்டு வளத்துடன் வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. இது, மனிதன் வாழ்ந்த உலகின் தொன்மையான இடங்களில் தமிழகமும் ஒன்று என்பதை உலகத்துக்குச் சொல்லும் அரிய வாய்ப்பு என்கிறார் சத்தியமூர்த்தி. அவரது எண்ணங்களை உள்வாங்கிக்கொள்ளும்போது ஆதிச்ச நல்லூர், தமிழகத்தின் சிந்துச் சமவெளியை போன்றது என்று நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது.இன்றுள்ள ஆதிச்சநல்லூரில், புதையுண்டுபோன பழைய நகரம் இருக்கக்கூடும் என்கிறார்கள். முழுமையான அகழ்வாய்வுகள் செய்யப்பட்டால் மட்டுமே உண்மைகள் வெளிப்படும். ஆனால், உலகிலேயே மிக தொன்மையான இடுகாடு எந்த விதமான முக்கியத்துவமும் இன்றி வெறும் பொட்டல்காடாக இருக்கிறது. ராமச்சந்திரன் தனது ஆய்வுக் கட்டுரையில், ஆதிச்ச நல்லூர் பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார். அதன்படி, 19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிச்ச நல்லூரில் ரயில் பாதை அமைக்கப்பட்டபோது, ஆழ்வார் திருநகரியில் இருந்த சடகோபாச்சாரியார் வைணவ மடத்துக்கு உரிய துண்டு நிலம் வழியாக  ரயில் பாதை செல்ல நேர்ந்தது. அந்த மடத்துத் தலைவர், ரயில்வே துறையிடம் நிலத்தை ஒப்படைக்க மறுத்துவிட்டார். பிரிட்டிஷ் அரசு, அந்த நிலத்துக்கு ஆண்டு வாடகையாக நான்கு அணா கொடுப்பதாகத் தீர்மானித்தது. மடத்துத் தலைவர் அதை ஏற்றுக்கொண்டார். நான்கு அணா ஆண்டு வாடகை, 2000-ம் ஆண்டு வரை கொடுக்கப்பட்டு வந்தது. இப்போதும் அது நடைமுறையில் உள்ளதா எனத் தெரியவில்லை என்கிறார்.சீனா, எகிப்து, மெசபடோமியா என உலகின் பழமையான நாகரிகங்களுக்கு இணையாக இந்தியாவில் கண்டறியப்பட்ட சின்னமே சிந்து சமவெளி நாகரிகம். சிந்து நதி ஓடிய மிகப் பெரிய பிரதேசத்தில் இந்த நாகரிகம் தழைத்து வளர்ந்து இருக்கிறது. இங்கு வாழ்ந்த மக்கள் பற்றியும் அவர்களின் மொழி குறித்தும் இன்றும் விவாதங்கள் நடக்கின்றன.சிந்து சமவெளியில் கி.மு 6000 ஆண்டிலேயே சிறிய நகரங்கள் உருவாக்கப்பட்டு, அங்கு மக்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். உலகின் வேறு எந்த நாகரிகத்திலும் காண முடியாத அளவு ஐந்து லட்சம் சதுர மைல்கள் அளவில், சிறியதும் பெரியதுமாக 200-க்கும் மேற்பட்ட ஊர்களும், ஆறு பெரிய நகரங்களும் இருந்திருக்கின்றன. இவை, வளர்ச்சியடைந்த ஒரு சமூகம் வாழ்ந்திருப்பதற்கான சான்றுகளாகத் திகழ்கின்றன. மொஹஞ்சதாரோ சிந்து சமவெளிப் பண்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்த முக்கிய நகரங்களில் ஒன்று. இந்த நகரம் கிமு 26-ம் நூற்றாண்டில் உருவாகி இருக்கக்கூடும் என்கிறார்கள். இந்த இடம் பாகிஸ்தானின் சிந்துப் பகுதியில் உள்ள சுக்கூர் என்ற ஊருக்கு தென் மேற்கே 80 கிமீ தூரத்தில் உள்ளது.ஹரப்பா, வட கிழக்குப் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், சகிவாலுக்கு 30 கிமீ தூரத்தில் உள்ளது. இங்கே 40,000 பேருக்கும் அதிகமாக மக்கள் வசித்து இருக்கக்கூடும் என்கிறார்கள். சிந்துவெளிப் பகுதிகளில் எந்த இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்தார்கள் என்று உறுதியாக அறிய முடியவில்லை. ஒரு சாரார் திராவிடர் எனவும் மறு சாரார் ஆரியர் அல்லது ஆரியக் கலப்பினர் என்றும் கூறுகிறார்கள்.சிந்துவெளி நாகரிகம், நகரம் சார்ந்த ஒன்று. அதிலும் முறையாக அமைக்கப்பட்ட நகர வடிவம், சுகாதார மேம்பாடுகொண்ட சூழல், திட்டமிடப்பட்ட பொதுக் குளியல் அறைகள், பாதுகாப்பான வீடுகளின் அமைப்பு, உறுதியானக் கோட்டை சுவர்கள் போன்றவை அன்று முறையாகக் கட்டட வடிவமைப்புகொண்ட ஒரு சமூகம் இருந்திருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.


சிந்து சமவெளியில், வீடுகள் தனியாகவோ அல்லது வேறு அயல் வீடுகளுடன் கூட்டாகவோ கிணறுகளில் இருந்து நீரைப் பெற்றுள்ளன. குளிப்பதற்குத் தனி அறைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மூடிய கால்வாய்கள் மூலமாக சென்று உள்ளது. தானிய சேமிப்புக் கிடங்குகள் தனியே அமைக்கப்பட்டு இருக்கின்றன.இங்கே வசித்த மக்களில் பெரும்பாலானோர் வணிகர்களாகவும், கைவினைப் பொருட்களைசெய்பவர்களுமாக இருந்து இருக்கிறார்கள். தனித்த சமயம் எதுவும் அறியப்படவில்லை என்றாலும், பெண் தெய்வங்களை வழிபட்டதற்கான அடையாளங்கள் இருக்கின்றன.மொஹஞ்சதாரோ கண்டுபிடிக்கப்பட்டது தற்செயலாகவே! பண்டைய பௌத்த மரபுகளைத் தேடி அலைந்துகொண்டு இருந்த ராக்கல் தாஸ் பந்தோபாத்யாயவிடம், ஓர் இடத்தில் இடிபாடுகள் நிரம்பிய புராதன செங்கல் கட்டடம் காணப்படுவதாக ஒரு துறவி கூறினார். ராக்கல் தாஸ் அதை ஆய்வு செய்தார். அதன் பிறகு 1922-ல் இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த ஒரு குழு, அந்த இடத்தை முறையாகத் தோண்டி ஆய்வு செய்தே மொஹஞ்சதரோ நகரத்தைக் கண்டுபிடித்தது.அதுபோலவே, கராச்சிக்கும் லாகூருக்கும் இடையில் ரயில்வே பாதை அமைக்கும்போது, இடிந்துபோன நீண்ட செங்கல் சுவர்கள் காணப்பட்டன. அதை ஆராய்ந்த ஜான் மற்றும் வில்லியம் புருன்டன் ஆகியோர், ஹரப்பாவின் மிச்சங்களைக் கண்டறிந்தனர். அதன் பிறகு, வெவ்வேறு காலகட்டங்களில் சர். ஜான் மார்ஷல், மார்ட்டிமர் வீலர், அகமது ஹஸன் போன்றோர் ஹரப்பாவை அகழ்வாய்வு செய்துக் கண்டறிந்தனர்.ஆரியர்களின் படையெடுப்பால் சிந்து சமவெளி நாகரிகம் அழிந்தது என்ற கருத்தாக்கத்தை மார்டிமர் வீலர்தான் முன்மொழிந்தார். அதையே இன்றும் சில ஆய்வாளர்கள் தூக்கிப்பிடித்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், குஜராத் மற்றும் சிந்துப் பகுதிகளில் ஏற்பட்ட பூகம்பமே சிந்து சமவெளி அழிவுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்று, இப்போது கருதுகின்றனர்.சிந்து சமவெளி பற்றிய ஆய்வுக்குப் பழந்தமிழ் மரபுகள் முக்கியமான சான்றாதாரமாக உதவும் என்கிறார் அஸ்கோ பர்போலா. ஐராவதம் மகாதேவன் இன்னும் ஒரு படி மேலே போய், சிந்து சமவெளி எழுத்துக்கள் திராவிட மொழி சார்புடையது என்பதோடு பண்பாட்டு நிலையில் பழந்தமிழ் அரசியலோடு மிக நெருக்கமுடையது என்கிறார்.சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கிய அடையாளம் கடல் வணிகம் மற்றும் நகர் சார்ந்த வாழ்க்கை முறை. 3000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி மக்கள் கடலில் நீண்ட பயணம் செய்து வணிகம் செய்து இருக்கிறார்கள். இதுபற்றி, மெசபடோமியாவில் குறிப்புகள் காணப்படுகின்றன. இயற்கைச் சீற்றம் காரணமாகவோ அல்லது புறநெருக்கடி காரணமாகவோ சிந்துவெளி அழியும்போது கப்பல் கட்டுபவர்கள் மற்றும் கலம் செலுத்துவோர் கடல் வழியாக வெளியேறி வேறு இடம் தேடிப் போயிருக்கக்கூடும் என்கிறார்கள். ஒருவேளை அவர்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குள் சென்று வாழ்ந்து இருக்கக்கூடும்.

கடல் வணிகத்தையும் கடல் சார்ந்த வாழ்வியலையும் முன்னிறுத்திக் கொண்டாடியது சங்க இலக்கியம். அதிலும் குறிப்பாக, பூம்புகார் போன்ற துறைமுக நகரின் வாழ்வும், அங்கு வாழ்ந்த வணிகக் குடும்ப வரலாறும் சிலப்பதிகாரத்தின் மையக் கதையாகி இருக்கிறது. ஆகவே, சங்க காலம் முதல் தமிழ் மக்கள் மேற்கத்திய நாடுகளுடன் விரிவான வணிகத் தொடர்பு வைத்து இருக்கிறார்கள். ஆகவே, கடல் வணிகத்திலும் நகரங்களை உருவாக்குவதிலும் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கக் கூடும் என்கிறார் பாலகிருஷ்ணன்.பாகிஸ்தானில் இன்றும் வழக்கில் உள்ள அம்பர், தோட்டி, தோன்றி, ஈழம், கச்சி, காக்கை, களார், மல்லி, மாந்தோய், மோஷி, வாகை, வானி, மிளை கண்டீர் ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் அம்பர், தோட்டி, ஈழம், கானம், மல்லி, மாந்தை, மோசி, வாகை, வானி, மிளை மற்றும் கண்டீரம் ஆகியவற்றை அப்படியே நினைவுபடுத்துகிறது என்றும், கொற்கை என்பது ஊரின் பெயராக மட்டுமின்றி நதியின் பெயராகவும் உள்ளது என வியப்பூட்டுகிறார் பாலகிருஷ்ணன்.அது மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானில் காணப்படும் பொதினே, பளனி ஆகிய பெயர்கள் சங்க இலக்கியம் குறிப்பிடும் பொதினி மற்றும் பழனியை நினைவுபடுத்துகின்றன என்பதோடு, தமிழ் மன்னர்களின் பெயர்கள், குறுநிலத் தலைவர்களின் பெயர்கள், சங்க கால கடவுள் பெயர்கள் என பலவும் ஆப்கான் மற்றும் பாகிஸ்தானில் காணப்படுவதாக மிக நீண்ட பட்டியலைத் தருகிறார்தமிழ்நாட்டில் பாலைவனம் கிடையாது. ஆனால், அகநானூற்றின் 245-வது பாடலில் எலும்பு தின்னும் ஒட்டகம் என்ற வரி இருக்கிறது. பசியில் உணவு எதுவும் கிடைக்காமல் போய் பல நாட்கள் தவித்த பிறகே வழியில் கிடக்கும் எலும்பைத் தின்று ஒட்டகம் பசியாறும். இது, பாலை நிலத்தில் மட்டுமே உள்ள வாழ்க்கை முறை. இது எப்படி சங்கக் கவிதையில் இடம் பெற்றது?பாடலைப் பாடிய மருதநாகனார், பாலை வாழ்க்கையை எப்படி அறிந்திருக்கிறார்? ஒட்டகம் அறியாத தமிழகத்தில் ஒட்டகம் பற்றி ஒரு பாடலில் முக்கியக் குறிப்பு வருவது முக்கியமான பண்பாட்டுச் சான்று என்று கூறுகிறார் பாலகிருஷ்ணன்.ஆகவே, சங்க இலக்கியத்துக்கும் சிந்துவெளித் தொன்மங்களுக்கும் இடையில் ஒரு தொப்புள்கொடி உறவு இருந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய ஆய்வை பழந்தமிழ் நாகரிகக் கூறுகளுடன் இணைத்தே இனிவரும் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும். அப்போதுதான், இந்தியப் பண்பாடு தனித்துவம் மிக்கதும் அசலானதும் என்பதை உலகுக்கு உணர்த்த முடியும்.

விகடன் 

No comments:

Post a Comment